உடல் நலம் குன்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி, சுய நினைவுடன், கண் விழித்து இருக்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான  கருணாநிதி கடந்த 27-ந் தேதியன்று ரத்த அழுத்தக் குறைவு காரணமாக  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அந்த நிலையில் இருந்து சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவின் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் 29-ந் தேதியன்று சுவாசிப்பதில் பிரச்சினை வந்ததால், அவருக்கு மருத்துவ ரீதியாக பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு அளித்தது. கருணாநிதியின் முக்கிய உடல்கூறுகள் படிப்படியாக சீரான நிலையை அடைந்துள்ளன.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும், வயது முதிர்ச்சியால் ஏற்படும் பொதுவான உடல்நல குறைவு, மாறுபட்டுள்ள கல்லீரலின் இயக்கம், ரத்த ஓட்டம் ஆகியவற்றால், அவரை மேலும் சில நாட்கள் மருத்துவமனையில்  தொடர்ந்து அனுமதிப்பது அவசியமாகிறது. நல்ல மருத்துவ உதவியுடன் கருணாநிதி உடல்நிலையின் முக்கிய செயல்பாடுகள் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது

இந்நிலையில் நேற்றிரவு மருத்துமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, . திமுக தலைவர் கருணாநிதி, சுய நினைவுடன், கண் விழித்து இருக்கிறார் என்றும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்