Karunanidhi is back DMK Leader latest Photos viral on internet

’பிறந்த நாள பவுசா கொண்டாடுனா உடம்புக்கு முடியாம போயிடும்’...பட்டிதொட்டி, சிட்டியெங்கும் இருக்கும் பலமான நம்பிக்கை இது. ஆனால் பகுத்தறிவாதிகள் இதை ஏற்பதில்லை. பலகாலமாக பகுத்தறிவுவாதியாக இருப்பதாலோ என்னவோ கருணாநிதியின் விஷயத்தில் இது பொய்த்திருக்கிறது. 

மெல்ல அல்ல சற்று மளமளவெனவே கருணாநிதியின் உடல் நலம் தேறி வருவதாக அவரது மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். கடந்த புதனன்று கருணாநிதி தனது பிரத்யேக அறையிலமர்ந்து தினசரி பேப்பர் வாசிப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. அதை மையப்படுத்தி ‘நான் திரும்ப வருவேன்னு சொல்லு! பழைய மு.க.வா திரும்ப வருவேன்னு சொல்லு’ எனும் தலைப்பில் கருணாநிதியின் தற்போதைய உடல்நிலை குறித்து ஒரு விரிவான ஸ்பெஷல் செய்தி வெளியிட்டிருந்தது நியூஸ் பாஸ்ட் செய்தி தளம். இதை தி.மு.க.வினரிடையே ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது. செம குஷியானார்கள் உடன்பிறப்புகள். 

இந்த பரபரப்புக்கு இடையில் வியாழனன்று மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாகியிருக்கிறது. கருணாநிதியின் இல்லத்து உள் அறை போல் இருக்கும் பகுதியில் மருத்துவர் ஒருவர் அவருக்கு இரத்த அழுத்தம் பரிசோதனை செய்வதை காட்டுகிறது அந்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் செவ்வாயன்று வெளியானதை விட கூடுதல் தெளிவாக இருக்கிறார் கருணாநிதி. கறுத்து களையிந்திருந்த அவரது முகத்தின் நிறம் வெகுவாக மாறி இயல்புக்கு திரும்பியது போல் தெரிகிறது. 

யார் அருகில் நின்றாலும் வெறித்துப் பார்ப்பது போல் இருப்பவர் இந்த படத்திலோ தனக்கு சிகிச்சை தரப்படுவதையும், அது போட்டோ எடுக்கப்படுவதையும் பார்த்து சின்னதாக வெட்கம் கலந்த புன்னகையை உதிர்த்தபடி இருக்கிறார். மஞ்சள் துண்டு மிஸ்ஸிங். ஆனாலும் பளீர் வெள்ளை நிற ஆடையில் பட்டாஸாக இருக்கிறார். ஆனால் இதற்கு முந்தைய போட்டோவில் அவரது கழுத்தில் மாட்டப்பட்டிருந்த பேண்டேஜ் இதில் இல்லை. இதன் மூலம் இந்த போட்டோ இப்போது எடுக்கப்பட்டது தானா என்கிற டவுட் சிலருக்கு வரலாம். ஆனால் இது இப்போது எடுக்கப்பட்டதே என்று சொல்லி தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பலர் சமூக வலைதளங்களில் மகிழ்வை பகிர்ந்து வருகிறார்கள். 

கருணாநிதி தன் காலில் ஸ்டைலியாக ஒரு கட் ஷூ அணிந்து ஜம்மென்று நகரும் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். மெலிந்திருந்த உடலும் சற்றே இயல்பாகியிருக்கிறது. 

ஆக நியூஸ் ஃபாஸ்ட் சொன்னது போல் கூடிய விரைவில் பழைய மு.க.வாகவே வந்து நின்று ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்று கருணாநிதி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோண்றுகிறது. இன்னும் சில நாட்களில் சட்டுபுட்டென்று நல் அதிகாலையில் எழுந்திருத்து தன் கரகர குரலில் ’வண்டியை எடுப்பா, தூத்துக்குடி பெரியசாமி வீட்டுக்கு போயி துக்கம் கேட்டுட்டு வந்துடலாம்!’ என்று டிரைவருக்கு ஆர்டர் போட்டாலும் போடுவார் என்று சொல்லி புன்னகைக்கிறார்கள் அவரது உதவியாளர்கள். உள் நடுக்கம் மறைந்து சுய தைரியம் வந்துவிட்டால் வீட்டில் முடங்காமல் அறிவாலயம் நோக்கி தீயாக கிளம்பிவிடுவார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்த நிர்வாகிகள். 

கருணாநிதியின் உடல்நிலை மலர்ச்சி, வளர்ச்சியால் கட்சி அதிகாரத்தில் ஸ்டாலினுக்கு மீண்டும் முடக்க நிலை வரலாம் என்று சிலர் விஷமத்தனமாக சிந்திக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் அப்படியெல்லாம் துளியும் நினைத்ததாக தெரியவில்லை. காரணம், அப்படி யோசிப்பவராக இருந்தால் கருணாநிதியின் படிப்படையான உடல் நிலை முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாக அனுமதிக்கவே மாட்டாரே. முழுக்க முழுக்க ஸ்டாலினின் விருப்பத்தோடும், சம்மதத்தோடுமே இவை வெளியாகின்றன. 

லேட்டஸ்ட் புகைப்படத்தை நன்கு உற்றுக் கவனித்தால் ஒரு விஷயம் நம் மனதை நெகிழ வைக்கிறது. அதாவது உடல் நிலை வெகுவாக குன்றி வீட்டிலேயே முடங்கி கிடந்து, இப்போது சற்றே தெம்பாகியிருக்கும் நிலையிலும் கட்சி கரைவேஷ்டியைத்தான் கட்டியபடிதான் அமர்ந்திருக்கிறார் கருணாநிதி. போட்டோவை ஜூம் செய்து பார்த்தால் அது அப்படித்தான் சொல்கிறது. 

இப்போது புரிகிறதா கருணாநிதியின் உயிர் மூச்சு கழகம்தான் என்று. கட்சியை அவரும் விடமாட்டார், கட்சியும் அவரை விடாது. 

காரணம்? நன்றாக கவனியுங்கள்...’தி.மு.க.’ என்பதில் இரண்டு பங்கு ‘மு.க.’தானே!