திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம், சிஐடி நகர் இல்லம் மற்றும் ராஜாஜி ஹால் போன்ற இடங்களில் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேவ கவுடா உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் தொண்டர்களும் கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல்  முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் கருணாநிதி சமாதியில் மலர் மாலைகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை  கவிஞர்  வைரமுத்து தன்து மகன்களுடன் வந்து பாலூற்றி வணங்கிச் சென்றார். தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், இரவு 7.40 மணியளவில், கருணாநிதி குடும்பத்தினர், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். மு.க ஸ்டாலின்,  அவரது மனைவி, மகன், மகள் மருமகன், மருமகள், பேரக்குழந்தைகள், மு.க அழகிரி, காந்தி அழகிரி, தயாநிதி அழகிரி, மகள், மு.க.தமிழரசு குடும்பத்தினர், ராஜாத்தி அம்மாள்,  கனிமொழி  உள்பட கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கொட்டும் மழைக்கிடையே, மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குடும்பத்தினரும் அவர்களுடன் இணைந்து கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி இறந்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் மூன்றாம் நாள் துக்க தினத்தை  அவரது குடும்பத்தினர் அனைவரும் அனுசரித்தனர்..