காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினரும் திமுக நிர்வாகிகளும் படையெடுத்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறியது. எனினும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்த நிலையில், நேற்று மீண்டும் மோசமடைந்தது. இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட  அறிக்கையில், வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். கடந்த வாரத்தை போலவே மீண்டும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விடிய விடிய காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலேயே தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர். அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது வரும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

நேற்றிரவு மருத்துவமனையில் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இன்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர். உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இவர்களைத் தவிர துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாது, மற்ற கட்சியினரும் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.