திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து காவிரி மருத்துவமனை தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் தொண்டர்களின் அழுகுரல் கேட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் நிலையில் மேலும் பினனடைவு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த சில மணி நேரமாக அவர் அபாய கட்டத்தில் உள்ளார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக  திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் அவருக்கு திடீரென ஏற்பட்ட பின்னடைவால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் டாக்டர்கள் அளித்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் அவர் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. முதுமை காரணமாக அவரது உடல் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றக் கொள்ளவில்லை என்றும் 24 மணி நேரம் பார்த்த பிறகே எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை நேற்று அறிவித்தது.

இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனையில் இருந்து தற்போது மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த சில மணி நேரமாக கருணாநிதியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துக உபகரணங்களைக் கொண்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அபாய கட்டத்தில் உள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.