திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வரும் 30-ம் தேதி சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். முக்கியமாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை தி.மு.க.வின் அழைப்பிதழ் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் அமித்ஷா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

திமுக கூட்டத்தில் பாஜக பங்கேற்பது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சராம் என பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை இன்று அவர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழிசை கரைத்தார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என்றால், தமிழக தலைமையிடத்துக்கு அதிகாரப்பூர்வமாக மத்திய தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிப்பார்கள். அவரது பயணத் திட்டம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.