காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவ் கரணாநிதியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த கட்சித் தொண்டர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். நேற்று இரவு தொண்டர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக தலைவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் ஊருக்கு செல்லும்படி வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் தி.மு.க. தொண்டர்கள் கவலையும், பதற்றமும் அடைந்தனர். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு இரவு, பகல் பாராமல் காத்து இருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்கள் கலங்கிபோயினர். இந்தநிலையில் டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை  நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார். அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பார்த்த புகைப்படமும் வெளியானதையடுத்து காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கருணாநிதி உடல்நிலை தேறியதால் ஆஸ்பத்திரி முன்பு கூடியிருந்த வெளியூரை சேர்ந்த தொண்டர்கள் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என்று தி.மு.க. தலைமை சார்பில் அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெளியூரை சேர்ந்த பெரும்பாலான தொண்டர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் காவேரி ஆஸ்பத்திரி முன்பு தொண்டர்கள் கூட்டம் நேற்று குறைவாகவே காணப்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்கோவில் சாலை வழியாக மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. காவேரி ஆஸ்பத்திரியை ஒட்டி உள்ள பிரபல வணிக வளாகங்களும் மீண்டும் செயல்பட தொடங்கின. ஆஸ்பத்திரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே காவேரி ஆஸ்பத்திரி முன்பு இயல்புநிலை திரும்பி உள்ளது.தற்போது காவேரி மருத்தவமனை முன்புறம் வெறிச்சோடி காணப்படுகிறது.