மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுக்கலாம் என்பதைப் பற்றி பேசாமல் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாகப் பிரதமர் மோடி பேசி வருகிறார் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காணொளி மூலம் இன்று பேசிய பிரதமர் மோடி,  “ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது” என்று  தெரிவித்தார். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சை சிவகங்கை தொகுதி எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்த இக்கட்டான காலகட்டத்தில் எவ்வளவு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுக்கலாம் என்பதைப் பற்றி பேசாமல் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாகப் பிரதமர் மோடி பேசி வருகிறார். இதனை விஞ்ஞானிகள் கேட்டால் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைவார்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.