கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 8 பேரின் கடிதங்கள் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை என அம்மாநில சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ் குமார், ‘அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்து ராஜினாமாவை சமர்ப்பிக்கவில்லை. என்னை வந்து சந்திக்குமாறு அவர்களுக்கு அவகாசம் அளித்திருக்கிறேன்’ என தெரிவித்தார்.

தன்னை நேரில் சந்திக்கவில்லை என்றால் அவர்களது ராஜினாமாவை ஏற்கப் போவதில்லை எனவும் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்களை பாஜகவினர் மிரட்டி பணிய வைத்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாக சபாநாயகர் அதிரடியாக பேசியுள்ளார்.