கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என பாஜக தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் என்னதான் நடக்குது ? எல்லோரும் ஆட்சிக்கு ஆதரவு தருகிறார்களா ? என முடிவு செய்ய இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் இன்றைய கூட்டத்தில் 76 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 3 பேர் ஆப்சென்ட். மும்பையில் தங்கியதாக கூறப்பட்ட 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வரவில்லை.

ஏற்கனவே 2 பேர் ஆதரவை வாபஸ் வாங்கியுள்ள நிலையில் தற்போது 3 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கர்நாடக அரசியலில்  குழப்பமும், பரபரப்பும் நீடித்து வருகிறது.

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா ? தப்புமா ? கவிழுமா ? சீக்கிரமே தெரிந்து விடும்.