பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார். சிங் நாடார் அதன்பிறகு ராஜ் நாடார் உடன் கொஞ்ச நாள், பிறகு சுபாஷ் பண்ணையாருடன் சிநேகிதம், இப்போது ராக்கெட் ராஜாவுடன் சுற்றித்திரிபவர் இந்த ஹரி நாடார்.

 

தோளில் புரளும் நீண்ட தலைமுடி, கழுத்து மற்றும் கைகளில் கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், ஆடம்பர கார் பவனி என பந்தாவாக வலம் வருபவர் ஹரி நாடார் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு அடுத்த இடம்பிடித்து அசரடித்தார். 

``இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இங்கே முதலீடு தேவைப்படும் தொழிலதிபர்களுக்கும் இடையே பாலமாக இருந்து பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்துவருகிறேன். இதுதவிர, அரசு அனுமதியோடு முறையான வகையில் வட்டித் தொழிலும் செய்துவருகிறேன்'' எனச் சொல்லும் ஹரி நாடாரின் முக்கிய தொழிலே கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி, வெளிமாநிலத்தவரை ஏமாற்றுவது தான்.

 

இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டபோது, பஸ்ஸை எரித்ததாக ஒரு பொய் வழக்கு, ஏமாற்றுதல் உள்ளிட்ட மொத்தம் 10 வழக்குகள் இவர் மீது இருக்கின்றன. இந்நிலையில் தான் ஹரி நாடார்  கர்நாடகாவில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக அதிரடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ஹரி நாடார் கர்நாடகாவில் கல்லூரி மற்றும்  மருத்துவமனை விரிவாக்கத்திற்கு  கடன் பெற்று தருவதாக கூறி அதன் உரிமையாளர்களிடம் கோடி கோடியாய் பண மோசடி செய்துள்ளார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஹரி நாடாரை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பனங்காட்டு படை தலைவர் கர்நாடகா சிறையில் கம்பி எண்ணப்போவது உறுதி என்கிறார்கள்.