பெங்களூருவில் குஜராத் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்‍கப்பட்டுள்ள விவகாரத்தில், கர்நாடக மாநில அமைச்சர் சிவகுமாரின் டெல்லி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, 10 கோடி ரூபாய் மற்றும் தங்க,வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்‍கு தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அக்‍கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்ததால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைமை, 40க்‍கும் மேற்பட்ட கட்சி எம்.எல்.ஏ.க்‍களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சொகுசுவிடுதியில் தங்க வைத்தது.

இவர்களை கண்காணிப்பது மற்றும் அதற்கான செலவுகளை கவனிப்பது போன்ற பணிகளை அம்மாநில எரிசக்‍தித்துறை அமைச்சர் சிவகுமார் மேற்கொண்டு வருவதாகக்‍ கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிலும், டெல்லி​உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அவருக்‍குச் சொந்தமான 39 இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று  அதிரடி சோதனை நடத்தினர்.

120 அதிகாரிகளைக்‍ கொண்ட குழுவினர், துணை ராணுவப்படை உதவியுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்‍கப்பட்டுள்ள ஈகிள்டன் கோல்ஃப் விடுதி பகுதியில் சிவகுமார் தங்கியிருந்ததாக கூறப்பட்டதால், வருமான வரித்துறையினர் அப்பகுதிக்‍கு சென்றும் சோதனை நடத்தினர்.