மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் தலைமையில் 19 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் மூலம் தங்களுக்கு 102 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது. ஆனால், ஆளுநர் மூலம் பாஜக முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது. இதற்காக ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தை செய்து வருகிறது காங்கிரஸ். இந்நிலையில் காங்கிரஸை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதற்கு முன் காங்கிரஸ் என்ன செய்தது? ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களை அந்தக் கட்சியில் சேர்த்தார்களா இல்லையா? இது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது போல ஆகாதா? அரசுக்கு ஆதரவளிக்கும் வேறொரு கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்துக்கொள்வதுதான் ஜனநாயகமா? இந்த தவறெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
கர்நாடகாவில் என்ன செய்தீர்கள். இங்கே காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவிக்காக எங்கள் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவில்லையா நீங்கள்? அதன் பிறகு எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்தவில்லையா?எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் கிரிமினல் மனநிலை கொண்டவை. 2018 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னால், எங்கள் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க நீங்கள் முயற்சி செய்யவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டும்.


எம்.எல்.ஏ., எம்.பி. கட்சி தாவினால் அவரும். அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து நாடு முழுவதும் விவாதம் நடைபெற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். குதிரை பேரத்தின் இன்னொரு பெயரே காங்கிரஸ்தான். அரசியலில் குதிரை பேரம் என்ற வார்த்தையே காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் வந்தது.” என்று குமாரசாமி காட்டமாக விமர்சித்தார்.