கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில்  சேரப்போவதாகவும், இதற்காக குதிரை பேரம் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே  குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்த 2 சுயேட்சை இரண்டு எம்எல்ஏக்களை தூக்கிய பாஜக  அவர்களின் ஆதரவை விலக்கி கொள்ள வைத்தது.

அதேசமயம் பாஜக  கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி அருகே ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி அருகே உள்ள குருகிராமத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டலில் தங்கியிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள், குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், விரைவில் அவர்கள் கர்நாடகத்திற்கு வருவார் என்றும் முதல்வர் குமாரசாமி கூறினார். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில் பாஜகவின் குதிரைபேரத்தை தடுக்கும் வகையில் சில பாஜக எம்எல்ஏக்களை தூக்க கர்நாடக  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.