நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்துமுடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர மற்ற 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டும் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. 542 தொகுதிகளில் 327 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 104 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 111 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 

கர்நாடகாவை பொறுத்தமட்டில் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அரிதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்த நிலையில், காங்கிரஸும் ஜேடிஎஸும் தேர்தலுக்கு பின் கூட்டணியமைத்து ஆட்சியமைத்தது; குமாரசாமி முதல்வரானார். 

இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னாள் பிரதமர் தேவெகௌடாவின் குடும்பமே பாஜகவிடம் குத்து வாங்குகிறது. முன்னாள் பிரதமர் தேவெகௌடா தும்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜிஎஸ் பசவராஜுவைவிட 8500 வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். 

தேவெகௌடாவின் பேரனும் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமி, மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள சுமலதாவிடம் தோல்வியடையும் நிலையில் உள்ளார். நிகில் குமாரசாமியை விட சுமார் 57000 வாக்குகள் அதிகம் பெற்று சுமலதா வலுவான முன்னிலையில் உள்ளார். 

தேவெகௌடா குடும்பத்தில் ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துள்ளார். தேவெகௌடாவின் முதல் மகனும் குமாரசாமியின் அண்ணனுமான ரேவன்னாவின் மகன் பிரஜ்வல் ரேவன்னா, ஹாசன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மஞ்சுவை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகிக்கிறார்.