இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கொரோனா பரவலின் 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தலைநகர் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் சில நகரங்களுக்கு இந்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். 

ஆனால் எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து  பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பிருந்தே அவருக்கு காய்ச்சல் நீடித்ததை அடுத்து பெங்களூரு ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எடியூரப்பாவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. தற்போது அவருக்கு மேற்க்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரு ராமையா நினைவு மருத்துவமனையில்  இருந்து மணிபால் மருத்துவமனைக்கு எடியூரப்பா மாற்றப்பட்டுள்ளார். 

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட போதும், அதே மணிபால் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடியூரப்பா 8 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு  ஆகஸ்ட் 10ஆம் தேதி கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.