என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன்.
கர்நாடகா முதல் அமைச்சர் பசுவராஜ் பொம்மை கே.எஸ். ஈஸ்வரப்பா கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். மேலும் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த காண்டிராக்டர் சந்தோஷ் கே பட்டீல் உடுப்பி டவுனில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் தான் காரணம் என்றும் அவர் வீடியோ பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
கடும் எதிர்ப்பு:
இதுகுறித்து காண்டிராக்டர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் உடுப்பி டவுன் போலீசார் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் மீது சந்தோஷை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து எதிர்கட்சிகள் சார்பில் அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ராஜினாமா:
மேலும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. எனினும், தன் மீது எந்த தவறும் இல்லை என கூறி தான் பதவி விலக மாட்டேன் என்றும் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்து வந்தார். அமைச்சர் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசுவராஜ் பொம்மை, அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவிடம் பதவி விலக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்தார். ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் பசுவராஜ் பொம்மை, அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக நேற்று (ஏப்ரல் 15) இரவு தெரிவித்தார். மேலும் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
விசாரணையை கெடுக்கும்:
"கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்த ராஜ் துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் என்னைவிட எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் தான் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன்."
"நான் குற்றமற்றவன் என்பது எனக்கு தெரியும். இருந்த போதும் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் நான் அமைச்சர் பதவியில் இருந்தால் அது விசாரணையை கெடுக்கும் வகையில் அமைந்துவிடும் என பலரும் நினைப்பார்கள். அதனால் நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இது எனக்கு அக்னி பரீட்சை. இதில் இருந்து நான் கண்டிப்பாக மீண்டு வருவேன். அதில் எனக்கு திடமான நம்பிக்கை இருக்கிறது. இந்த பிரச்சினையில் எனக்கான நீதி கிடைக்கும் என்பது உறுதி," என கே.எஸ். ஈஸ்வரப்பா ராஜினாமா செய்யும் முன் தெரிவித்தார்.
