காவிரி நீரை பெறுவது தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நீரை பங்கிட்டு வழங்குவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன.

கடந்த  ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கான 9.19 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டுமென்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் தங்கள் மாநிலத்திற்கே போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுத்தது.

 

ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறக்காததாலும், போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், இந்த ஆண்டும்  குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. 

இந்த சூழலில் சில நாட்களாக குடகு உள்ளிட்ட கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க ஒப்புதல் வழங்கியுள்ளார் . 


 
இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் மாண்டியா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அரசின் கோரிக்கைக்கு ஆணையம் செவிசாய்க்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குமாரசாமியின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.