மஜத கட்சி சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வர் குமாரசாமியை சிறந்த நடிகர் என கர்நாடக பாஜக கிண்டலடித்துள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி செயல்பட்டு வருகிறார். 

பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் பிரிவின் சார்பில் முதல்வர் குமாரசாமி, மஜத அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் மஜத கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவெ கௌடா, மஜத கட்சியின் மாநில தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி மற்றும அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, மங்களூருவில் போராட்டம் நடத்திய சில பெண்கள் தங்களுக்கான முதல்வர் குமாரசாமி அல்ல என கூறி கோஷமிட்டது தனது மனதை புணபடுத்திவிட்டதாகவும் மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை என வேதனை தெரிவித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கி அழுதார். அழுகையை அடக்க முடியாமல் திணறிய குமாரசாமி, கைக்குட்டையை வைத்து கண்களை துடைத்தவாறே உணர்ச்சிவயப்பட்டு பேசினார்.

நான் என்ன பாவம் செய்தேன்? பதவியேற்று 2 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்காமல் என்னை நிந்திப்பது ஏன்? விவசாய கடன்களை தள்ளுபடி செய்தும் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் பேசினார். மேலும் தனது கௌரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவானால், 2 மணி நேரத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

மக்களின் போராட்டத்தை எதிர்கொண்டு பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியாமல் இயலாமையால் முதல்வர் குமாரசாமி அழுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும் குமாரசாமியின் அழுகை, அவரது கட்சி தொண்டர்களை குமுற செய்தது. 

இந்நிலையில், குமாரசாமியின் அழுகையை கர்நாடக மாநில பாஜக கிண்டலடித்துள்ளது. நமது நாடு பல திறமையான நடிகர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் தங்களது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது நமக்கு, குமாரசாமி என்ற மிகச்சிறந்த நடிகர் கிடைத்துள்ளார். இவர் தனது நடிப்புத் திறமையால் மக்களை ஏமாற்றுகிறார். சிறந்த நடிகருக்கான விருது குமாரசாமிக்குத்தான் என கர்நாடக பாஜக டுவிட்டரில் கிண்டலடித்துள்ளது. 

அதேநேரத்தில் குமாரசாமி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.