கர்நாடக சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பாஜக நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்காமல் சட்டப்பேரவை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குமாரசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் கர் நாடகாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்காத நிலையில், சட்டப்பேரவையில் குமாரசாமி நேற்று நம்பிக்கை வாக்குக் கோரினார். ஆனால், 15 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கொறடா உத்தரவின் அடிப்படையில் சபையில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடிக் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.


இது கொறடாவுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுவதாக இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தெளிவான உத்தரவைப் பெற்ற பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று காங்கிரஸ், மஜத கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நேற்று சபையை ஒத்தி வைத்தார். எப்படியும் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்குக் கோரும், அதில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்த்த பாஜகவுக்கு இந்த நடவடிக்கை கடும் அதிரச்சியை ஏற்படுத்தியது. இதைப் பற்றி கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பாஜக புகார் அளித்தது. இதையடுத்து இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்தார்.


ஆனால், இன்று கவர்னர் விதித்த கெடு முடிந்தும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும்  சட்டப்பேரவையை மாலை 3 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பினார். ஆனால், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முழுமையான விவாதம் நடந்த பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; எல்லா எம்.எல்.ஏ.க்களும் பேசிய பிறகு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.


மேலும் திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த சபாநாயகரிடம் ஆளும் கூட்டணி  கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ரமேஷ்குமார், கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார். கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் 2 முறை கடிதம் எழுதியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால், பாஜக கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பமும் தீரவில்லை. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், அரசியல் நெருக்கடி தொடர்ந்தவண்ணம் உள்ளது.