2007-ல் மு.க. ஸ்டாலின் பாங்காக் சென்றது குறித்து தெரிவித்த கருத்துகளை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
 உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து சொல்லியதால், கட்டம் கட்டி அவரை காங்கிரஸ் கட்சி கழற்றிவிட்டது. தன்னை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற செய்ததில் திமுகவின் அழுத்தமே காரணம் என்று கராத்தே தியாகராஜன் நினைக்கிறார். ரஜினியின் நண்பராக அரசியல் கருத்துகளைக் கூறிவரும் கராத்தே தியாகரன், வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்று கூறி வருவதை திமுக ரசிக்கவில்லை.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு வாய்ப்பு கிடைக்குபோதெல்லாம் திமுகவை போட்டு வாங்குவதை கராத்தே தியாகராஜன் கனகச்சிதமாக செய்துவருகிறார். தியாகராஜனின் பின்னணியில் ரஜினி இருக்கிறாரா என்ற சந்தேகம்கூட திமுக வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றதில் மர்மம் உள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்த புகாருக்கு அதிமுகவினரே ஏதேதோ பதில் சொல்லி சமாளித்துவருகிறார்கள்.


இந்நிலையில் அதிமுகவுக்கு பாயிண்ட் எடுத்து கொடுப்பதுபோல கராத்தே தியாகராஜன் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், “தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின்  எழுப்பியுள்ள கேள்விகள் அதனைத்  தொடர்ந்து பல்வேறு விவதாங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் திமுக தலைவர் அண்ணன் மு,.க.ஸ்ட்டாலினுக்கு கடந்த கால நிகழ்வை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 
மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று தனது நண்பர்களுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றது விமானம் ஏறும் போதுதான் முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதிக்கே தெரியும். மேலும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் சென்றார் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன என்பதை நினைவூட்டுகிறேன்’’ என தனது கராத்தே தியாகராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால் கராத்தே தியாகராஜன் அதிமுகவில் இணையப் போகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. கராத்தே தியாகராஜனின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘கராத்தே தியாகராஜன் அதிமுகவில் சேர்த்து கொள்ளக்கூடாத நபர் அல்ல. சசிகலா, தினகரன் தவிர உலகில் யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார். 
“2007-ல் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் பற்றி நான் கூறியதை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நான் பொதுவாகத்தான் இக்கருத்தைக் கூறினேன். காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை விலக்கி வைத்திருப்பதால் சுதந்திரமாக எல்லாவற்றையும் பேச முடிகிறது. அப்படி பேசியதைதான் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரித்துள்ளார். இதில் வேறு அரசியல் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.