Asianet News TamilAsianet News Tamil

இஸ்லாம் மீதோ... கிறிஸ்துவத்தின் மீதோ கை வைத்து விட்டுவா பார்க்கலாம்... பெரியாருக்கு அப்போதே சவால்விட்ட கண்ணதாசன்..!

 ’பகுத்தறிவுத் தந்தைகள்’இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம் என கவியரசு கண்ணதாசன் அப்போதே பெரியாருக்கு சவால் விட்டு  எழுதிய கட்டுரை இப்போது சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. 

Kannadasan challenged Periyar
Author
Tamil Nadu, First Published Jan 20, 2020, 1:41 PM IST

’பகுத்தறிவுத் தந்தைகள்’இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம் என கவியரசு கண்ணதாசன் அப்போதே பெரியாருக்கு சவால் விட்டு  எழுதிய கட்டுரை இப்போது சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. 

தந்தை பெரியார் சேலத்தில் 1971ல் மாநாடு நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்றார். ஆனால் அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது. அப்போது அவருக்கு எதிராக கவியரசு கண்ணதாசன் எழுதிய கட்டுரை இது. கவிஞர் கண்ணதாசனின் ’எண்ணங்கள் ஆயிரம்’என்ற நூலிலிருந்து இடம்பெற்ற பெரியாருக்கு எதிரான காரசாரமான கட்டுரை இது. ’’நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.  நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

Kannadasan challenged Periyar

நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன். ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது. நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது. நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது.

குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது. என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.Kannadasan challenged Periyar

இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை. நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான். ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் ’பகுத்தறிவுத் தந்தைகள்’இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே! பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு‘வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய‘மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள்‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நடிகையின் ‘மேக் அப்’பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!

Kannadasan challenged Periyar

என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது? வேண்டுமானால்‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம். ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை. இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான். அவர்கள்  எப்படியோ போகட்டும்.  இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.

நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்? அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்க சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்கத் தொடங்குகிறார்கள். வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

Kannadasan challenged Periyar

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்? தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்? இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.  பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’’ என அவர் எழுதி இருக்கிறார். அவரது வரிகள் இன்றைய திமுக- திகவினருக்கும் பொருந்திப்போவதாக இந்தக் கட்டுரையை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios