Kannada people who ripped MGR images
கர்நாடகாவில் வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பேனரை கன்னடர்கள் சிலர் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ, இணையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவை நேரில் சந்தித்து பேசுவதற்காக அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து, எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், விவசாய பிரதிநிதிகளும், எதிர்கட்சி தலைவர்களையும் உடன் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கர்நாடகாவில், எம்.ஜி.ஆருக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று கன்னடர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடக முதலமைச்சருடன் நேரில் சந்தித்து பேச, தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த வீடியோ வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, இந்திரன் நகர், அல்சூர் லெட்சுமிபுரம் பகுதியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் எம்.ஜி.ஆர், ஐந்து வித தோற்றங்களில் காட்சி தரும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எம்.ஜி.ஆர் குறித்த வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பேனர் அருகே வரும் சில கன்னடர்கள், நாங்கள் எம்.ஜி.ஆரை மதிக்கிறோம்; அவர் ஒரு மலையாளி. அவருக்கு கர்நாடகாவில் என்ன வேலை. தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்திருக்கிறார். அங்கு வைத்து கடவுளாகக்கூட கும்பிட்டுக் கொள்ளுங்கள். எங்களுக்கு அதில் ஆட்சேபனை ஏதுமில்லை.
ஆனால், கர்நாடகாவில் அவருடைய படங்களை வைக்கக்கூடாது. இங்கு ராஜ்குமாருக்கு மட்டும்தான் பேனர் வைக்க வேண்டும். கர்நாடக சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் பேனர் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி இருந்தனர். திடீரென ஜெய் கர்நாடகா, ஜெய் கர்நாடகா மாதா என்று கூறிக்கொண்டு, அங்கிருந்த இளைஞருக்கு உத்தரவிடுகிறார்கள்.
அந்த இளைஞரோ, கையில் வைத்திருக்கும் கத்தியால், அந்த பேனரை கிழித்தெறிகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு மற்றொரு இளைஞரும் இணைந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர். பேனரைக் கிழித்தெரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, இணைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
