Kanimozhi wrote revolt poem about karunanidhi

அண்ணாவின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னர், கலை இலக்கியத்தை தொடாத யாரும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவில்லை. அந்த அளவுக்கு கலை இலக்கியம் என்பது திராவிட இயக்கங்களில் ஊறிப்போன ஒன்று.

அதேபோல், சிலர் எழுதும் கவிதை திமுகவின் பிளவுக்கு வழி வகுக்கும் என்பது அதன் கடந்த கால வரலாறு. தற்போது, வெளியாகி இருக்கும் கனிமொழியின் கவிதையும், திமுகவிற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

1992 ம் ஆண்டு “கருவின் குற்றம்” என்ற கவிதையை எழுதி திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் மறைந்த நாஞ்சில் மனோகரன். அதற்கு “காலத்தின் குற்றம்” என்ற கவிதையை எழுதி நாஞ்சில் மனோகரனுக்கு பதிலடி கொடுத்தார் மதுராந்தகம் ஆறுமுகம்.

ஆனால், நாஞ்சில் மனோகரனுக்காக குரல் கொடுத்த வைகோ, கொலை சதி குற்றம் சாட்டப்பட்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். மதிமுக என்ற கட்சியையும் அவர் தொடங்கினார்.

ஆனால், கருவின் குற்றம் என்ற கவிதை மூலம் கருணாநிதியை களங்கப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாஞ்சில் மனோகரன், மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

ஆனால், நாஞ்சில் மனோகரனுக்கு பதிலடி கொடுத்து, காலத்தின் குற்றம் என்ற கவிதையை எழுதிய மதுராந்தகம் ஆறுமுகம், வைகோவோடு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இது பழைய கதை.

ஆனால், தற்போது, திமுகவின் செயல் தலைவராகி உள்ள ஸ்டாலின், கனிமொழியை முற்றிலுமாக ஓரம் கட்டி விட்டார். கலைஞரின் வைரவிழா அழைப்பிதழில் கூட அவருடைய பெயரை போடவில்லை.

இந்த வெறுப்பும், ஆதங்கமும் கனிமொழியை வாட்டி எடுத்தாலும், விழாவுக்கு, வட இந்திய தலைவர்களை தமிழகத்திற்கு கொண்டு வரும் பொறுப்பு அவருக்கு இருந்ததால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்.

ஆனால், அதையும் மீறி, “மவுனம் கனத்து கிடக்கிறது” என்று கலைஞரை பற்றி அவர் எழுதிய கவிதை, அவர் விழா மேடையில் இருந்தபோதே, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவில் உள்ள நாடார் சமூகமும், ஸ்டாலினால் ஒதுக்கப்பட்டவர்களும், ஸ்டாலினை வெறுப்பவர்களும் தற்போது, கனிமொழியின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர். அத்துடன் ரஜினியும் அவ்வப்போது கனிமொழியுடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி வருகிறார்.

இந்த நிலையில், கனிமொழியின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் வெளியான இந்த கவிதை, திமுகவை மீண்டும் 1990 காலகட்டத்திற்கு அழைத்து செல்ல கூடும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் அறிவாலயத்தில் நடந்த உலக மகளிர் தின விழாவிலே, கனிமொழி, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்று, அவருக்கு நெருக்கமான திமுகவினர் கூறுகின்றனர்.

அழகிரியோடு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஸ்டாலின், கனிமொழொயோடும் மோதி கட்சியை சிதைத்து விடுவாரோ? என்றும், திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.