மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இப்போதே பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி. அவரை எதிர்த்து போட்டியிட ராதிகா சரத்குமார் தயாராகி வருவதால் துறைமுக நகரம் பரபரப்பாகி வருகிறது.  

வரும் மக்களவை தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு, மக்களின் நேரடியான ஆதரவுடன், மக்களவையில் காலடி எடுத்துவைக்க முடிவு செய்துள்ளார் கனிமொழி. இதற்காக கடந்த சில மாதங்களாகவே தூத்துக்குடிக்கு அடிக்கடி விசிட் அடித்து வரந்த அவர் இப்போது கிராம சபைக் கூட்டங்களை நடத்தி களப்பணியின் இறங்கி விட்டார்.

 

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணனனும், வடக்கு மாவட்டச் செயலாளராக கீதா ஜீவனும் செல்வாக்கோடு இருப்பதால் வாக்குகளை வளைத்து விடலாம் என்பது கனிமொழியின் திட்டம். தூத்துக்குடி தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக நாடார் சமூக மக்களின் வாக்குகள் உள்ளன. 

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நாடார் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அம்மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என நம்புகிறார் கனிமொழி. அத்தோடு அங்கு செல்வாக்கு பெற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியையும் சந்தித்து சில விஷயங்களை முன் வைத்திருக்கிறார் கனிமொழி. இதனால் கிட்டத்தட்ட தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். 

இந்நிலையில், எதிர்த்து தூத்துக்குடியில், சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட இருக்கிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சரத்குமார் களம் கண்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதி இது. ஏற்கனவே, சரத்குமாருக்கு அந்த தொகுதியில், செல்வாக்கு இருப்பதாலும், நாடார் சமூக வாக்குகளை நம்புவதாலும் ராதிகாவை வெற்றி பெற வைக்க முடியும் என நம்புகிறது சமத்துவ மக்கள் கட்சி. இதனால், தற்போதே தூத்துக்குடியில் தொகுதி வாரியாக பரப்புரையை தொடங்கிவிட்டார் சரத்குமார். இதனால், தற்போது, தூத்துக்குடி தொகுதி இப்போது நட்சத்திர தொகுதியாக அந்தஸ்து பெற்றுள்ளது.