சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் கைதானபோது அதிமுக பிரமுகருக்கு நெருக்கமானர் என்று அவர் மிரட்டியதாக தகவல் வெளியான நிலையில், இது பற்றி திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தான்குளத்தில் காவல் நிலையத்துக்கு கைது செய்து அழைத்து சென்ற தந்தை - மகன் ஜெயராஜ்-பெனிக்ஸ் ஆகியோர் மரணமடைந்தனர். போலீஸார் மிகக் கடுமையாக தாக்கியதில் இருவரும் மரமணடைந்ததாக புகார் எழுந்தது. இது நாடு தழுவிய நிலையில் விவாதப் பொருளானது. இதுபற்றி தாமாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதனையத்து தந்தை - மகன் மரணமடைந்த வழக்கில் சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டார்.

 

 

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைதானபோது, அதிமுக பிரமுகருக்கு நெருக்கமானவர் என மிரட்டும் தொணியில் ஸ்ரீதர் பேசியதாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. இந்நிலையில் அந்த அதிமுக பிரமுகர் பற்றி திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கனிமொழி வெளியிட்ட பதிவில், “குற்றவாளிகளை, அ.தி.மு.க காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.