அறிவியல் மேதை அப்துல்கலாம் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மகளீர் அணி செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில்  அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி இன்று ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பிரச்சாரபயணம் மேற்கொண்டார்.  காலையில் தனுஷ்கோடிசென்று அங்குள்ள மீனவர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே. அப்துல்கலாம் வீட்டிற்கு வருகைதந்தார். அவரை கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன் தலைமையில் கலாம் குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

கலாமின் அண்ணன் முகமதுமுத்துமீரா மரைக்காயரை சந்தித்து ஆசிபெற்ற கனிமொழிக்கு கலாம் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர் தான் எழுதிய அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். கலாமின் அண்ணன்வழிபேரன் ஷேக்சலீம் கலாமின் நினைவுகளை கனிமொழியோடு பகிர்ந்துகொண்டார். கனிமொழியுடன் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், முன்னாள் எம்பி. பவானிராஜேந்திரன், முன்னாள் நகர்செயலாளர் ஜான்பாய்,  ராமநாதபுரம் எம்பி. நவாஷ்கனி உட்பட ஏராளமானோர் கலாம் இல்லத்திற்கு வருகைதந்தனர்.