ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்தால், தமிழ்நாட்டிற்கு முதல்வர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கனிமொழி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் மக்கள் 49வது நாளாக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகியுள்ள குமரெட்டியாபுரம் மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த தலைமுறையாவது நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிசெய்ய வேண்டும் என்று மன்றாடுகின்றனர். இன்று 49வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

குமரெட்டியாபுரம் மக்கள் 49 நாட்களாக நடத்தும் போராட்டத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மற்ற மாநிலங்கள் புறக்கணித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்தார். தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள், தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் முதல்வர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது என கனிமொழி விமர்சித்தார்.