ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.


ரஜினி மக்கள் மன்றம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, 3 திட்டங்களை முன் வைத்தார். தன்  திட்டங்களை மக்களிடம் சொல்லி புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டார். கொரோனா தொற்றுக்கு அவருடைய ரசிகர் மன்றத்தினர் மக்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட துணைசெயலாளர், செயற்குழு உறுப்பினர் ஆகியோரை ரஜினி மன்றத்திலிருந்து நீக்கி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மன்ற மாநில நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்ற வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி மன்றத்தை வளர்க்காமல், மன்றத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட துணைசெயலாளர் இ.ராஜமூர்த்தி (ஏற்கெனவே மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவினால் 7-9-2018-ல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்) காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கமலக்கண்ணன் சிவ ஆகியோர்கள் மன்ற பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட இருவரும் எவ்வித மன்ற பணிகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், இனி வரும் காலங்களில் இவர்களது நடவடிக்கைகளை மாநிலத் தலைமை கூர்ந்து கவனித்து, அவர்களது செயல்பாட்டினை கருத்தில்கொண்டு மீண்டும் பொறுப்பு வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படும். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மேற்கண்டஇருவரிடம் எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறி செயல்படுபவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே கடலூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை குழுவை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தியதால், ரஜினி அழைத்து பேசினார். பின்னர் பின்னர் அவர்களை மன்றத்தில் இணைத்து கொண்டார். இதேபோல கடந்த ஆண்டு இளவரசன் என்ற நிர்வாகி சில மாதங்களுக்கு முன்பு தானாகவே ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.