உலகளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 415 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று சுய ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவித்தது. கடைகள், உணவகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டு பொது போக்குவரத்தான பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 75 மாவட்டங்களில் 31ம் தேதி வரை ஊரடங்கை தொடர செய்ய மத்திய அரசு முடிவு செய்து மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் இருந்து சென்னை,காஞ்சிபுரம், ஈரோடு என மூன்று மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.  இந்த நிலையில் 3 மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் கடைகளை அடைக்க ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மருந்து, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூட தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.