Asianet News TamilAsianet News Tamil

அவசரப்பட்டுட்டீங்களே கமல்..! செம்ம ஷாக் காத்திருக்குது !! உரித்து எறியும் விமர்சகர்கள்..

நாம்தமிழர் கட்சியினரை நிம்மதியாக போட்டியிட வைத்தால் நம் கதை கந்தலாகிடும்னு நினைச்சு, பல இடங்களில் சீமானின் வேட்பாளர்களை விலைக்கு வாங்கினர். இறுகிய கொள்கைகள் பணத்துக்கு இளகின

Kamalhassan makes wrong move in politics
Author
Chennai, First Published Jan 19, 2022, 6:34 PM IST

அது உண்மைதான்! கமல்ஹாசன் நடிக்கும் புதிய படங்களின் டைட்டில் மட்டும்தான் வெளியே அறிவிக்கப்படும். மற்றபடி தனது மேக்-அப் விஷயங்களை மனுஷன் பெரிய சர்ப்பரைஸாகதான் வைத்திருப்பார். சினிமாவில் தன் கேரக்டர் தோற்றத்தை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டார்.  திரையில் அதைக் கண்டு ரசிகர்கள் மிரள்வதில்தான் தனது உழைப்பின் வெற்றி இருக்கிறது என்பார்.

ஆக ரகசியங்களை சினிமாவில் அப்படி மூடி மறைத்து ஆச்சரியப்படுத்தும் கமல்ஹாசன், அரசியலில் தலைகீழாக இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவங்கி, ஒரு நாடாளுமன்ற தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்து, தனக்கும் தமிழகத்தில் வாக்குவங்கி இருக்கிறது என நிரூபித்துவிட்ட கமல்ஹாசன் இதோ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தயாராகிவிட்டார்.

Kamalhassan makes wrong move in politics

 ஆளுகின்ற - ஆண்டு முடித்த பெரிய கட்சிகளே இந்த தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர்களை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிலையில், கமல்ஹாசனோ ஓப்பனாக தன் வேட்பாளர்கள் லிஸ்டையே வெளியிட்டு அதிர வைத்துவிட்டார். அந்த வகையில், கோயமுத்தூர் மாநகராட்சியில் போட்டியிடும் தன் முதற்கட்ட வேட்பாளர்கள் லிஸ்டாக 47 பேர் அடங்கிய லிஸ்டை வெளியிட்டுள்ளார் கமல்.

இந்த லிஸ்டில் ம.நீ.ம.வில் மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பில் இருக்கும் கோவை மாநகராட்சியை சேர்ந்த நபர்களெல்லாம் கவுன்சிலர் வேட்பாளர்களாகி இருக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதிலும், குடும்ப தலைவி, தொழில் அதிபர், இளைஞரணி அமைப்பாளர் என்று பல தளங்களில் இருந்து நபர்களை வேட்பாளராக்கியுள்ளார்.

 

கமலின் இந்த ஸ்பீடை பார்த்து அரசியல் விமர்சகர்கள் “கமலின் இந்த வேகம் அரசியலுக்கு சரிப்பட்டு வராது. இவ்வளவு விரைவாக வேட்பாளர்களை அறிவித்தால், அது நெகடீவாக போகும் வாய்ப்புள்ளது.

அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலில் பலமான வாக்கு வங்கியை அறுவடை செய்த மூன்றாவது கட்சியாக நாம் தமிழர் கட்சி எழுந்தது. பல தொகுதிகளில் வெற்றியாளர்களையும், தோல்வியாளர்களையும் நிர்ணயிக்கும் சக்தியாக அந்த கட்சி இருந்தது. இதனால், அடுத்து வந்த ‘விடுபட்ட மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில்’ சீமான் அவசரப்பட்டு தன் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்தார்.

உடனே, நாம்தமிழர் கட்சியினரை நிம்மதியாக போட்டியிட வைத்தால் நம் கதை கந்தலாகிடும்னு நினைச்சு, பல இடங்களில் சீமானின் வேட்பாளர்களை விலைக்கு வாங்கினர். இறுகிய கொள்கைகள் பணத்துக்கு இளகின. பணத்தை வாங்கிக்கொண்டு தேர்தலில் இருந்து கடைசி நேரத்தில் விலகினர் சீமானின் வேட்பாளர்கள். பல இடங்களிலோ தீவிர பிரசாரம் செய்யாமல், வேண்டுமென்றே தோற்றனர். இன்னும் சில இடங்களிலோ ‘எனக்கு ஓட்டு போட வேண்டாம். அவருக்கு போடுங்க’ என்று எந்த கட்சியிடம் விலை போனார்களோ அவர்களுக்காக பிரசாரமே செய்தனர். நொந்தே போனார் சீமான்.

இப்போது கமலும் அதே தப்பைத்தான் செய்துள்ளார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் யார் யார் வார்டில் நல்ல பெயர் வைத்துள்ளனர், யார் யார் வாக்குகளை பிரிப்பார்கள் என்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நன்கு அலசி ஆராய்ந்து, அந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கவோ, மிரட்டி மெளனமாக்கவோ நிச்சயம் முயல்வார்கள். எனவே கமல் அவசரப்பட்டது ரொம்ப தப்பு. அவரது வேட்பாளர்களே கடைசி நேரத்தில் அவருக்கு ஷாக் கொடுக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.” என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios