இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தன் கட்சி சார்பில் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டு விட்டுதான் அரசியலுக்கு பிரேக் அறிவிப்பை சூசகமாக கமல் அறிவித்திருக்கிறார். 

பொள்ளாச்சி நகரின் காஸ்ட்லி ஏரியாவான மகாலிங்கபுரத்தில் கமல்ஹாசன் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பிச்சு ஒரு வருஷம் கூட ஆகலை அதுக்குள்ளே எப்படி இவருக்கு இந்த இடத்துல ஆபீஸ் போட முடிஞ்சுது? என்று கோயமுத்தூரின் பரம்பரை பணக்கார அரசியல்வாதிகள் வாயைப் பிளக்கின்றனராம். 

இந்நிலையில் அந்த அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஜெயலலிதா ஸ்டைலில் பால்கனியில் போய் நின்று தொண்டர்களுக்கு தரிசனம் தந்தாராம். அவரைக் கண்ட உற்சாகத்தில் ஆர்ப்பரித்த தொண்டர்களிடம் “இந்த அலுவலகம் உங்கள் வீடு! இங்கே நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், திறந்திருக்கும். ஒருவேளை மூடியிருந்தால், தட்டுங்கள் உடனே திறக்கப்படும்.” என்றார். உடனே ஏதோ  பொள்ளாச்சி டவுனில் தானே சொந்தவீடு கட்டி பால்காய்ச்சியது போல் கூத்தாடினார்களாம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க தொண்டர்கள். 

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த சந்தோஷத்துக்கு ஆப்படித்தார்களாம் கமலை சுற்றி நிற்கும் அவரது உதவியாளர்கள். மைக்கில்...செக்யூரிட்டிகளிடம், “தலைவர் மேடையிலிருந்து  இறங்கி வரப்போறார். அதுக்குள்ளே இங்கே இருக்கிற ஆளுங்க அத்தனை பேரையும் கேட்டை திறந்து வெளியில அனுப்புங்க. எல்லாரும் வெளியில போயி, இடம் ஃப்ரீயான பிறகுதான் தலைவர் கீழே வருவார், அவர் காரையும் ரெடியா வையுங்க. யாரையும் பக்கத்துல நிற்க விடாதீங்க. யேய் யாரப்பா கார் பக்கத்துல நிக்குறது?” என்று ஏக சவுண்டு விட்டார்களாம். 

அடுத்த சில நிமிடங்களில் அந்த ஏரியாவே தூசி துரும்பு இல்லாத வண்ணம் க்ளீனாகும்படி அத்தனை தொண்டர்களையும் வெளியே அனுப்பிவிட்டார்களாம் செக்யூரிட்டிகள். இதை கவனித்து, தடுக்கமுடியாமல் வருந்திய கட்சி நிர்வாகிகள் ’இப்பதான் தலைவர், இது உங்க வீடு! அது எங்க வீடு!ன்னு பாசம் காட்டினார். ஆனா அதுக்குள்ளே இந்த டீம் இப்படி கேவலப்படுத்துறாங்க. இதெல்லாம் தலைவருக்கு தெரிஞ்சு நடக்குதா, தெரியாம நடக்குதா? இப்படி பண்ணினா தொண்டர்கள் எப்படி அதிகரிப்பாங்க, வாக்கு வங்கி திடமாகும்?” என்று தலையிலடித்துப் புலம்பினார்களாம். 

ஆனால் கமலின் உதவியாளர்களோ...”எல்லாம் எங்களுக்கும் புரியுது. ஆனால் அவரோட பாதுகாப்பும் முக்கியமில்லையா! மத்த கட்சி தலைவர்கள் மாதிரி போலீஸ், பிளாக் கேட்ஸுன்னு பாதுகாப்பா இருக்குது நம்மவருக்கு! நாங்கதானே பாதுகாப்பு! தொண்டர்கள் அவரை பார்த்தா ஆர்ப்பரிச்சு வந்து மேலேயே விழுறாங்க. எசகுபிசகா எதுவும் ஆகிட கூடாதுன்னுதான் இந்த விரட்டல்.” என்றார்களாம். 

ஆனாலும் ‘என் கட்சி இராணுவம் போல்! என் தொண்டர்கள் சிப்பாய்கள்!’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கமலின் தொண்டர்கள், ‘தலைவரை நெருங்காதே! எட்ட நின்று ரசி’ என்று அன்புக் கட்டளையிட்டால் கேட்காமலா போய்விடுவார்கள்?
யோசிங்க கமல்.