தென் மாநிலங்கள் இணைந்த திராவிட கூட்டமைப்பு உருவாக வாய்ப்புள்ளது என்றும் திராவிடத்தை விஞ்ஞானமும் மெய்ஞானமும் நிரூபிக்க முடியும் என்று கல்லூரி விழா ஒன்றில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.

அரசியலுக்கு வர மாட்டேன் என்று பல ஆண்டுகளாக கூறிவந்த நடிகர் கமலஹாசன், கடந்த ஆண்டு அரசியலில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் களம் காணும் பணிகளில் தீவிரமானார்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்று மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

இதையடுத்து அவர் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல், திராவிடத்தை ஒழிக்க முடியாது எனவும் மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நியாயமானவர்களாகி விடுவார்கள் எனவும் தெரிவித்தார். 

இதன் பின்னர் மாணவர்களின் கேள்விக்கு கமல் பதிலளித்தார். மாணவர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்த அவர், தென் மாநிலங்களை இணைத்து திராவிட நாடு உங்களால் உருவாக்க முடியுமா? என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல், திராவிடத்தை ஒழிப்போம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அதற்கு நான் ஏற்கனவே திராவிடத்தை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளேன். திராவிடம் என்பது இனம்; நிலத்தை குறிக்கிறது. திராவிடம் என்பது இந்தியா முழுமைக்கும் இருக்கிறது. மகாராஷ்டிராவிலோ, வட இந்தியாவிலோ நம்மைப்போன்ற முகங்களைக் காண முடியும்.

தென் மாநிலங்கள் இணைந்த திராவிட கூட்டமைப்பு உருவாக வாய்ப்புள்ளது. திராவிடத்தை விஞ்ஞானமும், மெய்ஞானமும் நிரூபிக்க முடியும். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களை இணைத்து 6 கைகள் இணைந்த சின்னத்தை உருவாக்கியுள்ளோம் என்றார். மாணவர்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்றும் கமல் கூறினார்.