பா.ஜ.க.வைதேவையின்றி விமர்சித்து விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வந்துவிட்டது போன்று அவரது நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் தெரிகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் கரைக்க தமிழிசை டெல்லி சென்று வாங்கி வந்துள்ளார். அந்த அஸ்தியை பா.ஜ.கவின் தமிழக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து பா.ஜ.க அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.

 

அப்போது, வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்த விரும்புவதாகவும் வியாழக்கிழமை காலையில் கமலாலயம் வர விரும்புவதாகவும் தகவல் கூறியுள்ளனர். இந்த தகவல் உடனடியாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கு சொல்லப்பட்டுள்ளது. முதலில் தமிழிசை இதனை நம்பவில்லை. உடனடியாக தமிழிசை நேரடியாக ஸ்டாலினை தொடர்பு கொண்டு நாளை எப்போது வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு காலையிலேயே வர விரும்புவதாக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அடுத்த நிமிடம் தமிழிசை தமிழக பா.ஜ-கவின் ஊடக பொறுப்பாளர் பிரசாத்தை தொடர்பு கொண்டு ஸ்டாலின் கமலாலயம் வரும் தகவலை கூறியுள்ளார். 

பிரசாத்தும் உடனடியாக தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்த ஸ்டாலின் கமலாலயம் வரும் தகவலை கூறியுள்ளார். சொன்னது போலவே வியாழக்கிழமை காலை எட்டு மணி அளவில் ஸ்டாலின் கமலாலயம் வருகை தந்தார். அவரை தமிழிசை மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றனர். நேராக வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் சிறிது நேரம் அங்கு நின்று கொண்டிருந்தார்.அப்போது தமிழிசை உள்ளே சிறிது நேரம் அமரலாமே என்று கேட்டுள்ளார். அதற்கு சட்டென்று சரியனெ கூறிய ஸ்டாலின் உள்ளே சென்று தமிழிசை மற்றும் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது தி.மு.க தலைவராகப்போகும் ஸ்டாலினுக்கு தமிழிசை, பொன் ஆர் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். டெல்லி சென்று வாஜ்பாய் உடலுக்கே ஸ்டாலின் நேரடியாக அஞ்சலி செலுத்தினார்.

 

அப்படி இருந்தும் வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது தான் அவரது நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் வரும் 28ந் தேதி சென்னையில் நடைபெறும் வாஜ்பாய் இரங்கல் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க தலைவர்கள் மட்டும் இல்லாமல் தேசிய அளவிலான தலைவர்களும் வர உள்ளனர். அத்துடன் வரும் 30ந் தேதி சென்னையில் கலைஞருக்கு நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்குமாறு அகில இந்திய அளவில் பல்வேறு தலைவர்களுக்கும் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. 

அந்த வகையில் அமித் ஷாவுக்கும் தி.மு.க சார்பில் அழைப்பு சென்றுள்ளது. அமித் ஷாவை எப்படியேனும் கலைஞர் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஸ்டாலின் தரப்பு தீவிரப்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும் கூட ஸ்டாலின் தி.மு.கவின் தலைவராகப்போகும் நிலையில் தேவையில்லாமல் அந்த கட்சியை பகைத்துக் கொள்ள வேண்டாம் இணக்கமாக செல்லலாம் என்கிற முடிவே ஸ்டாலினின் இப்படியான மாற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

மேலும் கடந்த முறை அமித் ஷா தமிழகம் வந்த போது கோ பேக் அமித் ஷா என்கிற ஹேஸ்டேக்கை தி.மு.கவினர் ட்விட்டரில் டிரென்டாக்கினர். இதற்கு தி.மு.க ஐ.டி விங்க் முழு மூச்சாக வேலை பார்த்தது. இந்த அளவிற்கு பா.ஜ.க மீது வெறுப்பு இருந்த நிலையில் திடீரென அந்த வெறுப்பை தி.மு.க கைவிட்டுள்ளது கூட்டணி விவகாரத்தில் காங்கிரசுக்கு கடிவாளம் போடவாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.