கேரளாவில்  தொடர்ந்து நீடிக்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களுக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர்.  கிட்டத்தட்ட 54 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் முதலமைச்சர்  நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ள பினராயி விஜயன், பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து  கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், முதலமைச்சர்  நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார்.

மேலும் தமிழக மக்களும், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களும், பாதிப்பிற்குள்ளாகியுள்ள கேரள மக்களை காக்கும் பொருட்டு தாமாகவே முன்வந்து, நிதியுதவி வழங்க வேண்டுமென்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அவர்கள் இந்த நிவாரண தொகையை வழங்கியுள்ளனர்.

 இதே போல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்