ஆண் - பெண் இடையேயான கள்ள உறவு குறித்து உச்சநீதிமன்றம், நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. வயதுக்கு வந்த ஆண் - பெண் இடையேயான கள்ள உறவு குற்றம் அல்ல என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவை நீக்கவும் உத்தரவிட்டது. 

ஒரு பெண்ணுடைய எஜமானராக கணவரை ஒருபோதும் கருத முடியாது. ஆணுக்கு சமமாக பெண் நடத்தப்பட வேண்டும். கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல. கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் குற்றமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நியாயமானது என்று கூறியுள்ளார். 

உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயம்தான். புராணங்களில் கூட இந்த அளவு திறந்த மனது நமக்கு இருந்திருக்கிறது. 

இன்றைய நவீன யுகத்தில், ஆண் - பெண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாகத்தான் இருக்கிறது. காலாச்சாரம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறிக்கொண்டேதான் இருக்கும் என்றார்.  சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, விருப்பம் இருப்பவர்கள் கோயிலுக்கு செல்லலாம். ஆண் - பெண் அனைவரும் சமம் என்று கமல் ஹாசன் கூறினார்.