புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மிகவும் மெத்தனமாகச் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தருவதாகச் சொல்லும் எடப்பாடி அரசு, அது எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதையும் சொல்லவேண்டும். அதுவரை மக்கள் தார்ப்பாய்களுக்கு கீழே வாழ முடியாது’ என்று விளாசுகிறார் கமல்.

ஏற்கனவே புல பாதித்த பகுதிகளுக்கு விசிட் அடித்திருந்த கமல், இரண்டாம்கட்டமாக நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர்...

“கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் மீள்வதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு என்னென்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்ளும் ஓர் ஆய்வுப் பயணம் இது. முதலுதவிப் பயணமாக அல்லாமல், ஆய்வுப் பயணமாக அமையும். இவையெல்லாம் தேசத்தின் முக்கியமான பகுதிகள், ஆக, இது தேசியப் பேரிடர்தான். வந்து சென்ற எழுவர் கூறும் கருத்துகள் மத்திய அரசின் மனதை மாற்றும் என்று நம்புவோம்” என்று தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நேரம் குறைவாக இருக்க வேண்டும். செல்லும் உதவி குறைந்த காலத்திற்குள் செல்ல வேண்டும்.
ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அரசு கூறியிருக்கிறது. அதனை கட்டி முடிக்கும் வரை மக்கள் என்ன செய்வார்கள் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். தார்ப்பாய் அடியில் வாழும் அகதிகளாக அவர்கள் இருக்க முடியாது. நாங்கள் பார்த்த முகாம்கள் அனைத்தும் தொற்று பரவக் கூடிய முகாம்களாகவே தென்பட்டன, அதற்கு என்ன வழி என்பதை ஆராய வேண்டும். அரசு, கட்சி என்று வித்தியாசம் பாராமல் அனைவரும் இதற்குத் துணை நிற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

‘2.0’ ரிலீஸ் பிஸியில் இன்னும் ஒருமுறை கூட ரஜினி இப்பகுதிகளுக்கு விசிட் அடிக்காத நிலையில் கமல் இரண்டாவது முறையாகக் களம் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.