தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் மக்கள் 49வது நாளாக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகியுள்ள குமரெட்டியாபுரம் மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அடுத்த தலைமுறையாவது நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிசெய்ய வேண்டும் என்று மன்றாடுகின்றனர். இன்று 49வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 

குமரெட்டியாபுரம் செல்கிற வழியில், மக்கள் மத்தியில் பேசிய கமல், லாபத்தையும் சம்பாத்தியத்தையும் மட்டுமே கருத்தில்கொண்டு மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த தொழிலும் முடக்கப்பட வேண்டியதுதான். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்ட குரல், தமிழகம் முழுதும் சென்று சேர்ந்துள்ளது. 

ஆனால் போராட்டக்காரர்களின் குரல், தமிழக அரசின் காதில் விழுந்ததாக தெரியவில்லை. எனவே டெல்லிக்கு கேட்கும் அளவிற்கு போராட்ட குரல் இருக்க வேண்டும் என கமல் பேசினார்.

பின்னர் போராட்டக்களத்திற்கு சென்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.