கொரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மீது நாமெல்லாம் விமர்சனம் வைக்க இது நேரம் இல்லை என்று மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்  தமிழகத்தில் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் கொரோனா மையமாக சென்னை உருவெடுத்துள்ளதுல் சென்னையில் மட்டும் 20 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் கொரோனா மரணங்கள் மெல்ல மெல்ல அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சாதி, சமயம், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ‘நாமே தீர்வு’  என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.


இதுதொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன் தட்டை கரண்டியால்  தட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்தத் திட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த காணொளியில், “தட்டில் தாளம் போட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்கள். அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. ஆனால், நான் இங்கே தட்டை தட்டுவது உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக. ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்கடுக்க நடந்து, பசியால் சாவதை நாமெல்லாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.


நாள், கிழமை, மாதம் மறந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள்  பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது. அன்றாட காட்சிகளாகிவிட்ட  இவை எல்லாம் நடப்பதற்கு நம் எல்லோருடைய அலட்சியம்தான் காரணம். இதைப் பார்க்கும்போது கோபம் வருகிறது.
அதேவேளையில் கொரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மீது நாமெல்லாம் விமர்சனம் வைக்க இது நேரம் இல்லை. இது சில்லறைத்தனமான அரசியலுக்கான நேரமும் இல்லை. இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆக்கப்பூர்வ செயல்களுக்கான நேரம் இது. இதற்கு நாமே தீர்வாகும் நேரம் இது. நம் தலைநகர் சென்னையை கொரோனாவுக்கான தலைநகராக நாம் மாற்றி விடக்கூடாது.
அதைத் தடுக்கும் முயற்சிதான் ‘நாமே தீர்வு’ எனும் இந்த இயக்கம். இது தனி மனிதன் சார்ந்த இயக்கம் அல்ல. நாம் அனைவரும் பங்கேற்கும் இயக்கம். சாதி, மதம், மொழி, கட்சி பேதங்கள் என எல்லாவற்றையும் கடந்து ஒரே கோட்டில் இனிவரும் நாட்களில் நாம் இணைவோம். இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் இதற்குத் தேவை. வாருங்கள், நாமே கொரொனாவுக்கு எதிராக தீர்வாவோம்.” என்று கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.