கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு திமுகவும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒனறுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், திமுக ஒரு ஊழல் கட்சி, அதை எங்களால் தூக்கி சுமக்க முடியாது என தெரிவித்தார். இதே போல்  என்னைப் பாத்து  காப்பி அடித்து கிராமசபை கூட்டம் நடத்துகிறீர்களே… உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? என கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் சட்டசபைக்குள் நான் உங்களைப் போன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கொண்டு வர மாட்டேன் என்றெல்லாம் ஸ்டாலினை கமல் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து திருவாரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் கலந்து கொண்டு பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவை திருவாரூரில் கொண்டாட என்ன காரணம்  என்பது குறித்து அவர்  விளக்கம் அளித்தார்.

அப்போது  தமிழகத்துக்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்தான் . குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.. அதனால்தான் திருவாரூரில் கூட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து திமுகவுக்கு எதிராக கமல் பேசி வருவது திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.