தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகதான் இருக்கும்  என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அரசியலுக்கு வர மாட்டேன் என்று பல ஆண்டுகளாக கூறிவந்த நடிகர் கமலஹாசன், கடந்த ஆண்டு அரசியலில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் களம் காணும் பணிகளில் தீவிரமானார்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்று மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் , மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

இதையடுத்து அவர் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில், ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கமல், திராவிடத்தை ஒழிக்க முடியாது எனவும் மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நியாயமானவர்களாகி விடுவார்கள் எனவும் தெரிவித்தார். 

பள்ளிக்கு செல்வதையும், கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்திப்பதையும் தடுப்பது வேடிக்கையானது என்றும் விவசாயத்தை மாணவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டார். 

தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகதான் இருக்கும்  எனவும் கிராமியமே தேசியம் எனவும் பேசினார்.