வேலூர் தேர்தலை கமல் புறக்கணித்ததன் பின்னணியில் திமுக இருப்பதாக பரபரப்பாப பேசப்படுகிறது.

யாருமே எதிர்பாராத வகையில் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். சென்னை, கோவை மண்டலங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான வாக்குகளை குவித்தனர். இதனால் தமிழகத்தின் 3வது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம் என்கிற ரீதியில் புகழப்பட்டது. இதற்காக பிரத்யேக செய்தியாளர் சந்திப்பை எல்லாம் நடத்தி கமல் தனது பெருமைகளை பட்டியலிட்டார்.

இந்த நிலையில் வேலூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதிலும் வேட்பாளரை களம் இறக்கி கமல் கெத்து காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே திமுக – அதிமுகவிற்கு மாற்று என்கிற ரீதியிலான பிரச்சாரத்தை வலுப்படுத்தும் வகையில் வேலூரில் கமலின் வியூகம் இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் கணிசமான வாக்குகளை பெற்று அடுத்த சுற்று தேர்தலில் கமல் சாதிப்பார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் இவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் கமல் வேலூர் தேர்தலை புறக்கணித்துவிட்டார். சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வியூகமாக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக கமல் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் கட்சி சார்பில் வேலூரில் போட்டியிட ஏராளமானவர்கள் முன்வந்தனர். ஆனாலும் கூட கமல் இப்படி ஒரு முடிவெடுத்ததன் பின்னணியில் அவரது கூட்டணி அரசியல் உள்ளது என்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலேயே திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சு நடத்தியது. 3 இடங்களை ஒதுக்குமாறு கமல் கேட்டதால் அப்படியே ஓடிப்போய்விடுங்கள் என்று ஸ்டாலின் துரத்தி அடித்தார். பிறகு ஒரே ஒரு தொகுதி அதுவும் கமல் போட்டியிடுவதாக இருந்தால் என்று கூறி தென் சென்னையை ஒதுக்க முன்வந்தார் ஸ்டாலின். ஆனால் அதனை ஏற்க கமல் மறுத்துவிட்டார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஸ்டாலினுக்கு நெருக்கமான ஒருவர் கமலை அழைத்து பாராட்டியதாக கூறுகிறார்கள். அந்த நபர் மூலமாக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு தற்போதே தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரசின் தயவு தேவைப்படாது என்று திமுக கருதுகிறது. எனவே கமலை வளைத்துப்போட்டால் நன்றாக இருக்கும் என்று சில வாக்குகுறுதிகளை அவருக்கு கொடுத்ததாக சொல்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான் அந்த பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது, தேர்தலில் போட்டியிட்டால் ஸ்டாலினை விமர்சிக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் நினைத்து தான் கமல் வேலூரில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளார்.