தன் மீது 10க்கும் மேற்பட்ட இடங்களில் அவதூறு வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் முன் ஜாமின் கோரி கமல் தொடர்ந்திருந்த வழக்கு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் கமல் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் மக்கள் நீதி மய்யத்தினர் பயங்கர டென்சனில் உள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் முத தீவிரவாதி இந்து என்று கமல் பேசிய பேச்சு நாடு முழுவதும் சூடு பிடித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தொடங்கி தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதனால் எழுந்த எதிர்ப்பை ஒட்டி இரண்டு நாட்கள் தனது பிரச்சாரத்தை நிறுத்தி வைத்த கமல் மீண்டும் தனது பேச்சில் உறுதியாக நின்று பிரச்சாரத்தைத்தொடர்ந்தார்.

இந்நிலையில் தன்மேல் உள்ள வழக்குகள் எதிலும் கைது செய்யப்படாமல் இருக்க மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் கமல். இதற்கு மிக சாதாரணமாக முன் ஜாமின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாமின் மீதான தீர்ப்பை சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்து கமலுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது மதுரை உயர்நீதி மன்றக்குழு.