முகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் பவளவிழா, விரைவில் கொண்டாடப்பட இருப்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால், அதற்கான தேதியை கூறவில்லை.

இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேட்டபோது, அதற்கான அழைப்பிதழ் அச்சிடும் பணிகள் நடக்கின்றன. அழைப்பிதழ் வந்ததும், அறிவிக்கப்படும் என்றார். மேலும், முரசொலி பவளவிழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரும் பங்கேற்பார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் முரசொலி பவளவிழா நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழா அழைப்பிதழில் நடிகர் கமல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் கமல், தமிழக அரசில் ஊழல்கள் பெருகிவிட்டன என கூறினார். இதற்கு அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் நடிகர் கமல் கருத்து கூறுவது தவறில்லை. ஜனநாயக நாட்டில், குடிமகன்களுக்கு கருத்துரிமை இருக்கிறது என பல்வேறு கட்சியினரும், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வேளையில், முரசொலி பவள விழாவில் கலந்து கொள்ளும் கமல், தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்துவாரா என்பது அனைவரையும் எதிர்பார்க்கசெய்துள்ளது.