ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக கருத்து சொல்லிக் கொண்டிருந்த கமல் இன்று நேரடியாக அங்கு சென்று மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக அறிவித்திருந்தார். இதை கண்டித்து கடந்த 49 நாட்களாக குமரெட்டியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி வாழ் தமிழர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் அழைத்தால் பங்கேற்பேன் என்று கமல் ஏற்கெனவே கூறியிருந்தார். இதையடுத்து அந்த போராட்டக் குழுவினர் கமலை சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் அவர் இன்று போராட்ட களத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு விடுத்து அதன்படி கலந்து கொண்டார்.

இன்று காலை அவர் திறந்த வாகனத்தில் சென்று கூடியிருந்த மக்களிடையே பேசும்பொழுது, மக்களை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் எங்களுக்கு தேவையில்லை.  குற்றம் கடிதல் அரசின் வேலை அதனை அரசு செய்யவில்லை எனில் மக்கள் செய்வார்கள் என பேசினார். 

பின்னர் , நான் நடிகன் என்பதை காட்டிலும் மனிதன். எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாகவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் சுவாசித்த இந்த வேப்பமரக் காற்று எனக்கு புத்துணர்வை கொடுக்கிறது. நான் இங்கு போட்டோ எடுக்க வந்ததாக சிலர் கூறுகின்றனர். நான் அதற்காக இங்கு வரவில்லை. 

மேலும் என்னை வைத்து படமே எடுத்துவிட்டார்கள். அதுபோல் நான் ஓட்டுக்காக மக்களை சந்திக்கவில்லை. தனி மனிதனாகவே வந்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலை வியாபார பேராசையின் கோர முகம். தொழிற்சாலை நடத்துபவர்கள் அரசியல்வாதிகளுக்கு ரூ.8000 கோடி லஞ்சம் கொடுத்துவிட்டதாக தகவல்கள் எனக்கு வந்துள்ளன என்றார் அவர்.

மேலும் பேசிய அவர், மக்களுக்காக மய்யத்தை விட்டு விலகி ஒரு பக்கமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அனைத்திலும் மய்யத்திலே இருக்க முடியாது என்பதால் இப்போது மக்கள் பக்கம் சேர்ந்துள்ளேன் என்றும் தெரிவித்தார். அந்த போராட்டத்தில் மக்களுடன் மக்களாக கமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.