அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்து வாக்குப் பெட்டிகள் பத்திரப் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  வாக்கு பதிவு நடந்து முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சில இடங்களில் வாக்குப் பெட்டிகள் திறந்தவெளியில் பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான அசம்பாவிதங்களும், முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

இதனால் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை விழிப்புடன் இருந்து கண்காணித்து காக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  தேர்தல் ஆணையம் பாதுகாத்துக் கொள்ளும் என்று இருந்துவிடக்கூடாது என்றும், அனைவரும் எச்சரிக்கையுடன் 24 மணி  நேரமும் இரவு பகல் பாராமல் கண்விழித்து பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில்  கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் இன்று காலை திடீரென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆய்வு மேற்கொண்டார். அவர் போட்டியிடும் தொகுதியின் மின்னணு இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில்  வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.