கடந்த வாரம் அரவக்குறிச்சித் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்துப் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் நாக்கு அறுக்க வேண்டும் என பேசினார்.

கமல்ஹாசனுக்கு எதிராக மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் கமல்ஹாசன் பேச்சு குறித்து கொடைக்கானலில் செய்தியாளக்ளிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் கமல்ஹாசன் பள்ளிக்கூடத்துக்கே போகாதவர். அவருக்கு எப்படி வரலாறு தெரியும் ? என கேள்வி எழுப்பினார். ஒரு நூறு வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக கமல் கண்டபடி பேசித் திரிகிறார் என குற்றம்சாட்டினார்.

நடிகர் கமல்ஹாசன் ஆண்ட்டி இந்தியன் மட்டுமல்ல அவர் ஒரு ஆண்ட்டி மனித குலம் என்றும், கமல்ஹாசன் உடளடியாக தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.

இல்லையென்றால்,  ஆண்டாள் குறித்து தவறாக பேசியதால் வைரமுத்து என்னபாடு பட்டாரோ அது கமலுக்கும் நேரிடும் என எச்.ராஜா மிரட்டல் விடுத்தார்.