கடந்த மாதம் 21 ஆம் தேதி மதுரையில் புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் கமலஹாசன், இன்று ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு தேவர் மகன் ஸ்டைல் மீசையுடன் வந்ததால் அவரது ரசிகர்களும், கட்சியினரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அரசியலுக்கு வர மாட்டேன் என்று பல ஆண்டுகளாக கூறிவந்த நடிகர் கமலஹாசன், கடந்த ஆண்டு அரசியலில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் களம் காணும் பணிகளில் தீவிரமானார்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்று மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் , மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

இதையடுத்து அவர் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இன்று பிற்பகல் வரை சாதாரண கெட் அப்பில் இருந்த கமல் பின்னர்  தேவர் மகன், விருமாண்டி ஸ்டைல் மீசையுடன்  ரசிகர்கள் முன்பு தோன்றினார். அவருடைய கட்சி அலுவலகத்துக்கு புதிய தோற்றத்தில் வந்த போது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.


தற்போது புதிய படம் எதிலும் கமல்ஹாசன் நடிக்கத் தொடங்கவில்லை என்றாலும்  விஸ்வரூபம் 2 படத்தை முடித்துள்ளார். சபாஷ் நாயுடு படத்தை அவர் தொடர்வாரா இல்லையா என்பதை தெரியவில்லை. 

இதையடுத்து  ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளிவந்தன. . அப்படத்தின் வேலைகள் ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கமலஹாசனின் இந்த புதிய கெட்அப், திரைப்படத்துக்காகவா? அல்லது தனது ஸ்டைலை  அரசியலுக்காக  கமல் மாற்றிக்கொண்டாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.