சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? எனக்கூறி நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வுகாண கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ச்சியாக தமிழக அரசின் முடிவுகள், திட்டங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல்ஹாசன். மேலும், பிரதமர் மோடிக்குக் கமல் எழுதிய கடிதமும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக உரையாடி வருகிறார் கமல்.

இந்தச் சமயத்தில் தான் தங்கியிருக்கும் ஓட்டலிலிருந்து கட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக உற்சாகமாகக் கலந்துரையாடியுள்ளார். அனைவருடைய நலன், குடும்பத்தினரின் நலன் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், தீய பழக்கங்கள் இருந்தால் உடனடியாக விட்டுவிடவும் வலியுறுத்தி வருகிறார். ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை தொடர்பாகவும் அழுத்தமாக தனது குரலை உயர்த்தி வருகிறார். 

இந்நிலையில் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது’’எனத் தெரிவித்துள்ளார்.