சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய கமல் நேற்று முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் மூலையில் முடங்கி விட்டார்.

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல் பேசிய பேச்சுக்கள் தான் நேற்று முதல் தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழக ஊடகங்களிலும் highlight ஆகியுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இருந்து கமல் பேசியது மிகப் பெரிய சர்ச்சையானது. தமிழ் நெருப்பை பற்ற வைத்துவிட்டார் என்று தமிழிசை வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார். 

கமலை சும்மா விடக்கூடாது என்று எச். ராஜா ஆவேசமாக பேசினார். கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூளுரைத்தார். இப்படி கடுமையான எதிர்ப்புகள் எழுவதற்கு முன்பே அரவக்குறிச்சி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை கமல் ரத்து செய்து விட்டு தூத்துக்குடி புறப்பட்டார். ஒட்டப்பிடாரத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளரை ஆதரித்து நேற்று இரவு அவர் பிரசாரம் செய்வதாக இருந்தது.

 

ஆனால் அங்கும் கமல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. தங்கியிருந்த அறையை விட்டு கமல் வெளியே வரவில்லை. இந்து தீவிரவாதி என்று முஸ்லீம்கள் பகுதியில் பேசியதால் இந்துக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு நாம் ஆளாகியுள்ளதாக மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் கூறியது தான் இதற்கு காரணம். இந்த விவகாரத்தில் மன்னிப்பும் கேட்க முடியாது வருத்தமும் தெரிவிக்க முடியாது. 

எனவே என்ன செய்வது என்று தெரியாமல் நேற்று முழுவதும் கமல் மற்றும் கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் உருப்படியாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் கமலின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்க அவரது பிஆர்ஓ மக்கள் தொடர்பு கொண்டபோதும் அறிக்கை விரைவில் வெளியாகும் என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டனர். எதிர்ப்பு வலுவாக இருப்பதால் கமல் இந்த விவகாரத்தை திறம்பட சமாளித்தால் மட்டுமே அடுத்தகட்ட பிரச்சாரத்திற்கு செல்ல முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.